நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

150

“வைரமுத்து ., நல்ல கவிஞர் என்பதை விட , அவர் மிகவும் நல்ல மனிதர்…” என்று பிரபல நடிகர் சார்லி., ‘ஃபைண்டர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேச்சு !!

-நடிகர் சார்லிக்கு பெண் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்காதிருந்தால் சரி !!”

அறிமுக இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், சார்லி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், நடிகை பிரானா…. ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை அரபி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வியன் வெஞ்சர்ஸ் சார்பில் இப்பட (ஃபைண்டர்) இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரசாந்த் வெள்ளியங்கிரி ஒளிப்பதிவு செய்ய, சூர்ய பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ்குமரன் படத்தொகுப்பு செய்ய, அஜய் சம்மந்தம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஃபைண்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் கே.டி.குஞ்சுமோன் , தனஞ்செயன் … உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சாலி, “இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது, அண்ணன் வைரமுத்து இந்த விழாவிற்கு தலைமை தாங்குவது எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் பெருமை, இந்தப் படத்தில் பெரிய கதாநாயகர்கள் இல்லை, இந்த படத்தில் கதை தான் நாயகன் , வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன். பாடலாசிரியர் அய்யா வைரமுத்து ., நல்ல கவிஞர் என்பதை விட மிகவும் நல்ல மனிதர் நன்றி மறவா மனிதர். இந்தப் படம் பலரது உழைப்பில் உருவானது. படம் நன்றாகவந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

இறுதியாக ,
கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், “இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோன் அவர்களுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம், சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குநரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உற்று கவனித்தேன் அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல … சரித்திரம் படைக்க வந்தவர்கள் ! நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பை தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் இன்று சினிமாவில் தயாரிப்பாளர்களை கண்டு பிடிப்பது அரிது , இந்த தயாரிப்பாளருக்கு எந்த அய்யமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும், இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது. சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது அதனால் யாரும் எழுதட்டும் … யாரும் பாடட்டும் … அதில் யாரும் நடிக்கட்டும் .. ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும், இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன், இந்தப் படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சனை ஏற்படுத்துகிறது என்றனர், தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவன், நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான், அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் இந்தப்படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன், படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.

அரபி புரொடக்சன்ஸ் வெற்றி பேசுகையில், “இந்த அரபி தயாரிப்பு மூலம் ஈழத்தில் பதினைந்து ஆண்டுகள் பல படைப்புகளை கொடுத்துள்ளோம், இன்று எங்களின் முதல் தமிழக படைப்பு அதற்கான விழாவில் நன்றி தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் வினோத் ராஜேந்திரன் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் , மேலும் கவிஞர் வைரமுத்து அய்யாவுக்கும் எனது நன்றி. அவர் இந்தப் படத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார், நடிகர் சார்லி அவர்களுக்கும் எனது நன்றி, ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்துள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு எங்களது நன்றி ,படக்குழு அனைவருக்கும் எனது நன்றி, ஒரு சிறந்த படைப்பை எங்களுக்கு அளித்துள்ளனர், இங்கு வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.” என்றார்.

இயக்குநர் தயாரிப்பாளர் வினோத் ராஜேந்திரன் பேசுகையில், “இந்த விழாவிற்கு வந்ததோடு அல்லாமல், இப்படத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்த அய்யா வைரமுத்து, நடிகர் சார்லி ஆகியோருக்கு என் நன்றிகள். இப்படத்தில் அனைவருமே தங்கள் படம் போல் கருதி மிக கடினமான உழைப்பை தந்துள்ளார்கள். நாங்கள் நினைத்ததை விட சுவாரஸ்யமான படமாக உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். இவ்விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

‘ஃபைண்டர்’ பட திரை இசை வெளியீட்டு விழாவில்
தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் , தயாரிப்பாளர் K.T. குஞ்சுமோன் , இசையமைப்பாளர் சூர்யபிரசாத் , நடிகர் செண்ட்ராயன் உள்ளிட்டோரும் ‘ஃபைண்டர்’ படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்
என்று அந்தப் படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான வைரமுத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை பிரபல பாடகி சின்மயி முன்வைத்ததையும் அது, மீடூ என பிரபலமானதையும் தொடர்ந்து மேலும் சில பாடகிகள் தற்போதும் வைரமுத்துக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், ”வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை விட அவர் மிகவும் நல்ல மனிதர்” என்று பிரபல நடிகர் சார்லி ‘ஃபைண்டர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சான்றிதழ் வழங்கியுள்ளதை கண்டு “பெண்கள் அமைப்புகள் , நடிகர் சார்லிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களுடன் கொடி பிடிக்க போகின்றன ! பார்த்து ..!” என ‘ஃபைண்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் நம் அருகில் இருந்த குறும்புக்கார சினிமாக்காரர் ஒருவர் சிரிப்பு மூட்டினார். அவர் கூற்று பற்றி சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவும் செய்யவும் !!

😇🤪😃😜😩😎😩😜😃🤪😇