க/பெ ரணசிங்கம் விமர்சனம்

வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்பவர்களின் துயரங்களைச் சொல்லும் படங்கள் தமிழில் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ஆனால், க/பெ ரணசிங்கம் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகக் கொடூரமான ஒரு சிக்கலை விவரிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ரணசிங்கம் (விஜய் சேதுபதி), அரியநாச்சியை (ஐஸ்வர்யா ராஜேஷ்) கல்யாணம் செய்த பிறகு வேலை பார்ப்பதற்காக வளைகுடா நாடு ஒன்றுக்குச் செல்கிறார். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவர் இறந்துவிட, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர அரியநாச்சி நடத்தும் போராட்டம்தான் படம்.

சிறையில் இருக்கும் கணவனை மீட்க, கடத்தப்பட்ட கணவனை மீட்க, குழியில் விழுந்த குழந்தையை மீட்க பெண்கள் நடத்தும் போராட்டங்களைப் பின்னணியாக வைத்து வந்திருக்கும் உணர்ச்சிகரமான படங்களின் பட்டியலில் இந்தப் படமும் சேர்ந்திருக்கிறது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதாநாயகன் மரணமடைந்துவிடுகிறான் என்ற முக்கியமான கட்டத்திற்கு படம் வந்துவிடுகிறது.

இதற்குப் பிறகுதான் ஃப்ளாஷ்-பேக்கில் ரணசிங்கத்தின் வாழ்க்கை சொல்லப்படுகிறது.

ரணசிங்கம் – அரியநாச்சி இடையிலான காதல் காட்சிகள், திருமண வாழ்க்கை ஆகியவை ரசிக்கவைக்கும் வகையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சிகள் வருவதற்கு முன்பே துயரம் நடந்துவிட்டதால், இந்தக் காட்சிகளின் அழுத்தமும் கூடியிருக்கிறது.

இம்மாதிரியான சூழலில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் விரிவாகக் காட்டப்படுகிறது. சாதாரண மக்களை கீழ்நிலை அதிகாரிகள்கூட எந்த எல்லைக்குத் துரத்த முடியுமோ அந்த எல்லைக்குத் துரத்துகிறார்கள். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக அரசியல்வர்க்கத்தின் ஒரு பகுதியினர் ரொம்பவுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். அரியநாச்சியின் பிரச்சனை தெரிந்தவுடனேயே உதவுவதற்கு களத்தில் இறங்கிவிடுகிறார்கள். இறந்துபோன கணவனின் உடலை வாங்க பத்து மாதமாகப் போராடும் பெண்ணின் கதையில் இவையெல்லாம் ரொம்பவுமே நெருடும் காட்சிகள்.

முழு படத்தையும் தோளில் சுமந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லாத் தருணங்களிலுமே இயல்பாக இருக்கிறார். உணர்ச்சிகரமான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உள்பட படத்தில் வரும் மற்றவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில்கூட மிகையாக நடிக்கவில்லை என்பது படத்தின் ப்ளஸ்.

படத்தில் ரணசிங்கம் மக்களுக்காக நடத்தும் போராட்டங்கள் விரிவாகக் காட்டப்படுகின்றன. இது படத்தின் நீளத்தை வெகுவாக அதிகரித்திருக்கிறது (2 மணி நேரம் 57 நிமிடங்கள்). பல காட்சிகள் தேவையில்லாத நீளத்துடன் இருக்கின்றன.

மேலும் பல காட்சிகள் படத்தில் தேவையே இல்லாதவை. படத்தின் க்ளைமாக்ஸில் வரும் இறுதிச் சடங்கு தொடர்பான காட்சிகள், படத்தை ஒரு படி கீழே இழுத்திருக்கின்றன. இவையில்லாமல் இருந்திருந்தால், இன்னும் கச்சிதமான படமாக வந்திருக்கும்.

படத்திற்குப் பின்னணி இசை ஜிப்ரான். பாடல்கள் மனதில் நிற்கவில்லையென்றாலும் சில வரிகள் நீண்ட நேரம் நெஞ்சில் நிற்கின்றன.

Comments (0)
Add Comment