நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
அம்மா தயாரிப்பில் மகன் இயக்கி இருக்கும்., பத்து வயது மகனின் பாலியல் தொழிலாளி தாய் சந்திக்கும் சமூக ரீதியிலான பிரச்சனைகளை பேசும் தமிழ் படம்! ‘மாலை நேர மல்லிப்பூ’!
21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபமாக சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் கலந்து கொண்டு பேசும் போது,
“இந்தப்படத்தோட இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட பர்ஸ்ட் படத்துல எடுத்ததுக்காகவே நீங்கெல்லாம் கை தட்டலாம். என்னோட கேளடி கண்மணி படத்துக்கு ஆனந்த விகடன்ல அப்ப துணை ஆசிரியராக இருந்த மதன் சார் விமர்சனத்துல ஒரு வரி எழுதி இருந்தாரு. “ஒரு குழந்தை டிராக்டர் ஓட்டுகிறது” அப்டின்னு. எனக்கு அப்ப அது புரியல.. ஏன் சார் அப்படி எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன்.. அப்ப அவரு சொன்னாரு, மத்த வண்டியெல்லாம் ஓட்டிரலாம். டிராக்டர் ஓட்டுறது ரொம்ப கஷ்டம். அதனால தான் அந்தப் பாராட்டுன்னு சொல்லிருந்தாரு. அந்தப் பாராட்டு இந்தப் படத்துக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். நான் இன்னும் முழுப் படமும் பார்க்கவில்லை. ஆனாலும் இங்கு காட்டிய சின்ன சின்ன க்ளிப்ஸ் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் போலத் தெரியவில்லை. பல படங்களை எடுத்த அனுபவமிக்க இயக்குநர் எடுத்த மற்றொரு படம் போலத்தான் இது இருக்கிறது. இதைத்தான் நான் இயக்குநரும் நண்பருமான கே.எஸ்.ரவிக்குமாரிடமும் கூறினேன். “நாமெல்லாம் ரொம்ப காலம் உதவி இயக்குநராகவே கழித்து விட்டோம்” என்று சிரித்துக் கொண்டோம். இந்தப் படத்தோட இயக்குநரைப் பாராட்டுவது போலவே இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குநரின் தாய் விஜயலெக்ஷ்மிக்கும் என் பாராட்டுக்கள். ஏன் என்றால் மகனின் முதல் படம், தலைப்பு ‘மாலை நேர மல்லிப் பூ” அதைப் புரிந்து கொண்டு அவர்களின் தாய் அதை தயாரிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். வினித்திரா மிகச்சிறந்த நடிகை. இப்படத்திற்கு அவர்களும் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு கதை எழுதும் போது ஏதாவது ப்ளாக் ஏற்பட்டா சென்னை கிறிஸ்டின் காலேஜ் தான் போவேன். அங்க இருக்குற ஏராளமான மரங்கள் தான் எனக்கு கதை சொல்லும். அந்தக் காலேஜ்ல தான் இந்த இயக்குநர் படிச்சிட்டு வந்திருக்காரு, அதனால அந்த மரங்கள் அவருக்கு ஏராளமான கதைகளை சொல்லி இருக்கும். இது போன்ற மிகச் சிறந்த படங்களை அவர் எடுக்க வாழ்த்துகிறேன்.” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து….
’நெடுநல்வாடை’ பட இயக்குநர் செல்வக்கண்ணன் பேசும் போது, ” இந்தப் படத்தோட கிளிப்பிங்க்ஸ் விஷ்வல்ஸ் பார்க்கும் போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நிச்சியமாக இளம் இயக்குநர் சஞ்சய் நாராயணனிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கிட்டு அதை ஒரு உப்புமா படம் போல பல பேர் எடுத்து வைப்பாங்க… ஆனா இந்தப் படம் அப்டி இல்லை. டெக்னிக்கலாவும் நல்ல ஸ்டிராங்கான படமாத் தெரியுது. ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.. நான் இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளரப் பாத்து சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.. ஏன்னா எல்லாரும் பாக்குறதுக்கு ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க.. அப்டியே ஸ்கூல்ல இருந்து வந்தவுங்க மாதிரியே இருக்காங்க.. பட் அவுங்க படைப்பை பார்த்தால் பிரமிப்பாக இருக்குது. நம்பவே முடியல. டிரைலர் பாக்கும் போதே இந்தப் படத்தோட Depth என்னென்னு தெரியுது. எடுத்த கதைக்கருக்கு படம் கண்டிப்பா நியாயம் சேர்க்கும்னு தோணுது. அம்மாவுக்கும் பையனுக்குமான உறவை சொல்லுகிற படத்தை இயக்குநரின் அம்மாவே தயாரித்து இருக்கிறார். அது மிகவும் அழகான விசயம். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற அம்மா எல்லாருக்கும் கிடைக்காது. இயக்குநர் மிகவும் அதிர்ஷ்டசாலி அவரது அம்மாவுக்கு என் நன்றிகள். மொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்”.படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் பேசும் போது,
“இது ஒரு சின்ன படம். ரொம்ப ரொம்ப சின்னப் படம். இதற்கு நீங்கள் இவ்வளவு ஆதரவு தருவது, இந்த ஹால் முழுக்க நிரம்பி இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்கள் படத்தின் டிரைலரை ஆன்லைனில் வெளியிட்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சாருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. எனறு நன்றி நல்கினார்.அவரைத் தொடர்ந்து….இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது., இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயலெக்ஷ்மி., என் கல்லுரி விரிவுரையாளர் Mr.ராஜேந்திரன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் என்னை சந்திக்க வந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு விடுத்தார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருப்பதில்லை என்பதால் புறக்கணிக்க நினைத்தேன். படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இயக்குநரைக் கேட்டேன். அவர் என் அம்மா தான் என்று சொன்னார். அவர்கள் நல்ல பணக்காரர்களா ? என்று கேட்டேன். இயக்குநர் இல்லை சார், என் அம்மா எனக்காக அவர்களின் நகைகளை எல்லாம் விற்று படம் தயாரித்திருக்கிறார் என்று கூறினார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இவர்கள் தான் இப்படத்தை முன்னெடுத்தவர், அதனால் தான் அவரை முன்னால் அமரச் சொல்லிக் கேட்டேன். இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பார்ப்பதற்கு கார்த்திக் சுப்புராஜ் போல இருக்கும் இந்த இயக்குநர் அவரைப் போலவே பெரும் புகழ் அடைய வாழ்த்துகிறேன். இயக்குநர் வசந்த் கூறியது போல், ஒவ்வொரு காட்சியிலும் கணம் இருந்தது. கதைக்கருவிற்கு காட்சிகள் வலு சேர்க்கிறது. நாயகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்பொழுது கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளம் வளர்ந்து வருகிறது. எனவே யார் மூலமாக இப்படத்தை வெளியிடுவது என்பதில் கவனமாக இருக்கவும். எனக்குத் தெரிந்து இதை ஓடிடி தளத்தில் வெளியிடுவது சிறந்தது” என்று கூறினார்.
நாயகி வினித்ரா மேனன் பேசும் போது, “இந்த படக்குழுவைப் பார்க்கும் போது இவர்களை நம்பலாமா..?” என்று தோன்றியது. ஏனென்றால் என்னைவிட அனைவரும் இளையவர்களாக இருந்தார்கள். ஆனால் கதையை படித்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அது போல் இயக்குநரின் அம்மா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லை. இப்படத்தின் எல்லா துறைகளிலும் அவர்கள் பணியாற்றினார்கள். உணவு தயாரிப்பது, ஆர்ட் டிப்பாட்மெண்டில் உதவுவது, காஸ்ட்யூம் ரெடி செய்வது இப்படி இப்படத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் அவர்கள் தான். “மொத்தமே எங்கள் யூனிட்டில் ஒரு பத்து பேர் தான் இருப்போம். நான், எனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை எடுக்கும் போது பல தருணங்களில் நாங்கள் எல்லோருமே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினோம். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை கொடுத்து உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று உருக்கமாக பேசினார்.
அவரைத் தொடர்ந்து… இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசும் போது,
“ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா..? என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயதில் காமம் காதல் வந்தால் தான் அது சரி. ஒரு வயதுக்கு மேல் காதல் காமம் வந்தால் அது மனநோய். ஆக இது தான் காதல் மற்றும் காமத்திற்கான வயது. எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார். நம் தமிழ் திரையுலகின் கமர்ஸியல் மாஸ்டர் என்றால் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் தான். அவருடைய பாராட்டு இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது. அது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.. அது போல கிளாசிக் மாஸ்டரான இயக்குநர் வசந்த் சாரின் பாராட்டும் இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது. ஆக கமர்ஸியல் மற்றும் கிளாசிக் இயக்குநர்கள் இருவரின் பாராட்டையும் இப்படம் ஒருங்கே பெற்றிருப்பதால் இந்தநாள் சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதற்கு முழுக் காரணம் வறுமை. இதனால் பாதிக்கப்படும் ஆண் வன்முறையை நோக்கியும் பெண் பாலியல் தொழில் நோக்கியும் போகிறாள். பாலியல் தொழில் என்பது ஆதித் தொழில். பைபிளில் இது குறித்த கதைகள் இருக்கின்றது. நம்முடைய தமிழ் புராணமான சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரம், புகார் நகரில் இருந்த பெரிய பாலியல் தெருக்கள் போன்ற குறிப்புகள் எல்லாம் நாம் அறிவோம். ஆக அப்போது இருந்த ஒரு ஆதித் தொழில் இன்றைய 5G யுகத்தில் எப்படி இருக்கிறது ? என்பதைத் தான் இயக்குநர் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு சமூகத்திலும் தாய் என்பவள் மிகவும் வலிமையானவள்; அவளை நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். அவள் தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படித்தான் வலிமையான தாய் தன் மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக எப்படி போராடுகிறாள் என்பதே கதை. சிலப்பதிகாரத்தில் மாதவியும் தன் மகள் மணிமேகலைக்கும் அதையேதான் செய்தாள். ஆக பாதிக்கப்படும் பெண்களின் சார்பாக பேச வேண்டியது ஒரு எழுத்தாளனின் ஒரு படைப்பாளியின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றும் படைப்பாகத்தான் இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இயக்குநரின் முதல் படத்திலேயே இவரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இப்படத்திற்கும் இப்படக் குழுவினருக்கும் மிகப் பெரிய வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.
இவ்வாறு ., திரைத்துறை பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘மாலை நேர மல்லிப்பூ’ வேற லவலில் இருக்க வாழ்த்துவோம். அதெல்லாம் இருக்கட்டும் …இப்பட நாயகி, வினித்ரா மேனன் ., இப்பட விழாவில் ,
“மொத்தமே எங்கள் யூனிட்டில் ஒரு பத்து பேர் தான் இருப்போம். நான், எனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை எடுக்கும் போது பல தருணங்களில் நாங்கள் எல்லோருமே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினோம். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை கொடுத்து உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.”
என்று பேசியதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை… படமோ , தாயின் பாலியல் தொழில்… மகனுக்கு எந்த மாதிரி பாதிப்பை உண்டாக்கும் ? அதனால், சமூகத்தில் அவன் எந்த மாதிரி ரியாக்ட் செய்வான்…. என்பது மாதிரியான கதையை உள்ளடக்கியது. அந்த கதையில் கதையின் நாயகி வினித்ரா., அவர் தான் அந்த 10 வயது மகனின் தாய் . அவர் ,”உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது தடுமாறினேன்…” என்றெல்லாம் இவ்விழாவில் பேசியது., “இந்த, அந்த மாதிரி படத்தில் … எந்த மாதிரி சீனில் நடித்தபோது அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது போனது…?” என இவ்விழாவில் கலந்து கொண்ட சில குறும்புக்கார பத்திரிகையாளர்களை கிசுகிசுக்க விட்டது சுவாரஸ்யமான தனிக்கதை ! ஹீ …ஹீ…!
😇😳😃🥱🤪🥱😃😳😇