பரோல் -விமர்சனம்

348

அம்மா மகனின் பாச போராட்டம் , அண்ணன் தம்பியின் ஈகோ மோதல் , குற்றவாளிகள் அவசர சூழலில் .,ஜெயிலில் இருந்து பரோல் பெறுவதில் உள்ள நடை முறை சிக்கல்கள் … உள்ளிட்ட விஷயங்களை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விளக்கி வெளியாகி உள்ளது ‘பரோல் திரைப்படம்.

லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘பரோல்’ . விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்!

‘பரோல்’ படத்தின் கதைப்படி .,

கணவரை இழந்த தாய் , ஆராயி உடன் அவரது இரண்டு மகன்கள் வடசென்னையில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருகின்றனர் . முதல் மகன் கரிகாலன் மீது தாய் ஆராயி உயிரையே வைத்துள்ளார். இதனால் இரண்டாவது மகன் கோவலனுக்கு தன்னுடைய சகோதரன் மீது கோபமும் பொறாமையும் உண்டாகிறது. இந்நிலையில் தன்னுடைய சின்ன வயதிலேயே தங்கள் அம்மாவை தவறாக பார்த்த ஏரியா வாசி ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்து விடுகிறார் கரிகாலன். இதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட ., அங்கு இவரையும் , இவரைப்போன்ற இன்னும் சில சிறார்களையும் சிலர் தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்த அவர்களையும் கொலை செய்து விடுகிறார் லிங்கா . வெளியில் இருக்கும் அம்மா ஆராயி தன்னுடைய மூத்த மகனை வெளியே கொண்டு வர போராட ., கோவலன் தன்னுடைய அண்ணன் வெளியே வரக்கூடாது… என திட்டம் போடுகிறார். இந்நிலையில் அம்மா ஆராயி திடீரென உயிரிழக்க…. அதன் பிறகு என்னவானது? கரிகாலன் எப்படி பரோலில் வருகிறார் ? அவருக்கு தம்பி கோவலன் உதவி செய்கிறாரா ? உபத்திரவம் தருகிறாரா .?! என்பது தான் ‘பரோல் ‘ படத்தின் கதையும் களமும்.

கரிகாலனாக லிங்கா மற்றும் கோவலனாக ஆர்எஸ் கார்த்திக் ஆகிய இருவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பலம் சேர்த்து உள்ளனர். அம்மா ஆராயி ஆக ஜானகி சுரேஷ்., படத்தில் தான் இடம் பெற்றிருக்கும் நேரம் வரை ., சின்ன பையனுக்கும் பெரிய பையனுக்குமிடையே யான ஈகோ மோதலில் சிக்கித்தவித்து நம் அனைவரையும் உருக வைத்து விடுகிறார்.

இயக்குனர் துவாரக் ராஜா வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து நம்மை கவர்ந்துள்ளார் என்றாலும் முகம் சுளிக்க வைக்கும் சில பல பாத்ரூம் காட்சிகள், அதுபற்றியே அடிக்கடி பேசும் வசனங்களால் சில இடங்களில் முகம் சுளிக்க வைத்திருக்கிறார் என்பது மறுப்பதற்கு இல்லை. அதேநேரம் , தன்னை ஒரு திறமையான இயக்குனராகவும் கோர்ட் – பரோல் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிரூபிக்கவும் தவறவில்லை என்பதால் அவரை பாராட்டலாம். இப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை இப்பட காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. படத்தொகுப்பாளர் மட்டும் இன்னும் சற்றே கத்தரியை தீட்டியிருக்கலாம்.

மற்றபடி , ஒரு மனிதன் , தன் கோபத்தால் காலம் முழுக்க அனுபவிக்கும் கஷ்டங்களை பேசியிருக்கும் ‘பரோல்’ படத்தை பார்க்கலாம் ரசிக்கலாம்.

நாம் தியேட்டரில் கேட்ட Talks :

வித்தியாசமான கதைக்களத்தை பேசி நம்மை ஒரு மாதிரி கவர்ந்துவிடும் ‘பரோல்’ படத்தில் ஒரு சில முகம் சுளிக்க வைக்கும் பாத்ரூம் காட்சிகள், அதுபற்றியே அடிக்கடி பேசும் வசனங்கள் மட்டும் சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இல்லாமல் இருந்திருந்தால் ., படத்தை தூக்கி நிறுத்தும் இதுவரை, தமிழ் சினிமாவில் பார்த்திராத அசத்தலான டீடெயில் கோர்ட் – பரோல் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளால்., ‘பரோல்’ படத்திற்கு 5 க்கு 4.5 மதிப்பெண் கொடுக்கலாம். அது மாதிரி அருவறுக்கதக்க ஒரு சில காட்சிகள், வசனங்களால் இந்தப் படத்திற்கு 5 க்கு 3.5 மட்டுமே தர முடிகிறது என புலம்பிய படியே ஒரு சீனியர் பத்திரிகையாளர் சென்றது நம் காதுகளிலும் விழாமல் இல்லை. இப்பட சம்பந்தப்பட்டவர்கள் தங்களது அடுத்தடுத்த படங்களில் இதுமாதிரி குறைகள் இல்லாது பார்த்து கொண்டால் சரி.

‘ பரோல்’ படத்திற்கு நம் மதிப்பெண் 3.75/5